இரவு வேளை (#11260)

என் கடவுளே, என் பிரபுவே, எனதாவலின் எல்லையே, இந்த உமது ஊழியன் உமது கருணையெனும் புகலிடத்தில் உறங்கி, உமது தயை என்னும் நிழலில் இளைப்பாற விரும்பி,  உமது  கண்காணிப்பையும்  பாதுகாப்பையும் வேண்டுகின்றான்.

என் பிரபுவே, உம்மையன்றி வேறெதனையும் நான் கண்ணுறாதிருக்க, என்றும் அயரா உமது கண்களைக் கொண்டு என் விழிகளைப் பாதுகாக்குமாறு உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். உமது அடையாளங்களை உணர்ந்து கொள்ளவும் உமது வெளிப்பாட்டின் எல்லையைக் கண்ணுறவும் எனது பார்வைக்குச் சக்தியருள்வீராக. உமது சர்வ வல்லமையின் வெளிப்படுத்துதல்கள் முன்னால் சக்தியின் சிகரமே நடுங்கியது.

எல்லாம் வல்ல, அனைத்தையும் ஆட்கொண்டிடும், நிபந்தனைக்கு  உட்படாத  இறைவன்  உம்மையன்றி வேறெவருமிலர்!

-Bahá'u'lláh
-----------------------

இரவு வேளை (#11261)

இறைவா, என் இறைவா, உம்மைப் பிரிந்ததன் காரணமாக உமக்காக ஏங்கிடுவோரின் கண்கள் விழித்திருக்கும் போது, எங்ஙனம்   நான் மட்டும் துயில் கொள்ள இயலும்? உம் முன்னிலையிலிருந்து தூரத்தில் இருப்பதனால் உமது அன்பர்களின் ஆன்மாக்கள் அலைக்கழித்்து வருந்துகையில் நான் மட்டும் எங்ஙனம் படுத்து ஓய்வு எடுத்திட இயலும்?

என் பிரபுவே, என் ஆன்மாவையும் என்னையும் முழுமையாக  உமது  வலிமை,  பாதுகாப்பு என்னும் வலக்கரத்தினில் ஒப்படைத்துள்ளேன். உமது சக்தியின் மூலமே நான் தலையணையின் மீது சிரம் சாய்த்துப் பின் உமது சித்தத்திற்கும்,  நல்விருப்பத்திற்கும் ஏற்ப அதனை நிமிர்த்தியுள்ளேன்.   உண்மையாகவே   நீரே   காப்பவர், பேணுபவர், சர்வ வல்லவர், அதி சக்தி வாய்ந்தவர்.

உமது வலிமை சாட்சியாக! தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும், நான், நீர் விரும்புவதைத் தவிர வேறெதனையும் கோருவதில்லை. நான் உமது ஊழியன், உமது கரங்களில் இருக்கின்றேன். உமது நல்விருப்பம் எனும் நறுமணத்தினைப் பரவச் செய்யக்கூடியதனைச் செய்திட அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவீராக. உண்மையாகவே, இதுவே எனது நம்பிக்கையும் உமதருகில் மகிழ்வுறும் பேறு பெற்றோரின் நம்பிக்கையும் ஆகும். உலகங்களுக்கெல்லாம் பிரபுவானவரே, நீர் புகழப்படுவீராக.

-Bahá'u'lláh
-----------------------

இரவு வேளை (#11296)

எனதாண்டவரே, என் பிரபுவே! நான் உமது ஊழியனும், உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பம் என்னும் பகலூற்றிலிருந்து உமது ஒருமைத் தன்மையெனும் பகல் நட்சத்திரம் தோன்றி, உமது கட்டளை என்னும் திருநூலில் விதிக்கப்பட்டுள்ளவற்றிற்கு இணங்க சர்வலோகத்தின் மீதும் தனது பிரகாசத்தினைப் பாய்ச்சிடும் இவ்வதிகாலையில் நான் என் துயிலிடம் விட்டு எழுந்துள்ளேன்.

என் இறைவா, நாங்கள் உமது அறிவொளியின் பிரகாசங்களைக்  கண்ணுற விழிப்புற்றமைக்காக  நீர் போற்றப்படுவீராக. ஆகவே, என் பிரபுவே, உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாவற்றையும் தவிர்க்கவும், உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாப் பற்றுகளையும் துறப்பதற்கும்  உதவுபவை எவையோ அவற்றை எங்கள்பால் அனுப்பி அருள்வீராக.

மேலும் எனக்கும் எனதன்புக்குப் பாத்திரமான-வர்களுக்கும், ஆண் பெண் அனைவரும் அடங்கிய எனது சுற்றத்தார்களுக்கும்,  இம்மையிலும்  மறுமையிலும் நன்மை தரக்கூடியவற்றை எழுதி அருள்வீராக. படைப்பு முழுமையின் அன்புக்குப் பாத்திரமான இறைவா, பிரபஞ்சம் அனைத்தின் ஆவலே, உமது தவறாத  பாதுகாப்பின் மூலமாக மனிதர்களின் மனதில் ஓசை எழுப்பும் தீய ஓசையாளனின் வெளிப்படுத்துதல்களாக நீர் ஆக்கியுள்-ளோரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. உமது விருப்பத்தினைச் சாதிக்க வல்லவர் நீரே. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.

பிரபுவே, எனது ஆண்டவரே, எவரை உமது அதி உயரிய பட்டங்களுக்கெல்லாம் மேலாக வைத்து, எவர் மூலமாகத் தெய்வீகத் தன்மையுடை-யோரையும் தீயோரையும் பிரித்து, நீர் அன்பு கொண்டு விரும்பியதனைச் செய்திடக் கருணை கூர்ந்து உதவியுள்ளீரோ அவரை ஆசீர்வதிப்பீராக. இறைவா, மேலும் உமது சொற்கள், உமது எழுத்துகள் ஆகியோரையும், உந்தன்பால் பார்வையைச் செலுத்தி, உமது வதனத்தின் பால் முகத்தைத் திருப்பி, உமது அறைகூவலைச் செவிமடுத்-தோரையும் ஆசீர்வதிப்பீராக.

உண்மையாகவே, நீரே எல்லா மனிதர்களுக்கும் பிரபுவும் அரசனும் ஆகி, அனைத்துப் பொருள்களின் மீது சக்தியும்  கொண்டுள்ளவர்.

-Bahá'u'lláh
-----------------------

இரவு வேளை (#11297)

என் கடவுளே, நான் உமது பாதுகாப்பினில் கண்விழித்துள்ளேன்; அப் பாதுகாப்-பிடத்தினைத் தேடுபவன் உமது ஆதரவெனும் புகலிடத்திலும் உமது பாதுகாப்பெனும் கோட்டையிலும் வசிப்பது பொருத்தமே. என் பிரபுவே, என் புற உருவினைக் காலைக் கதிரவனின் கிரணங்களினால் ஒளிபெறச் செய்தது போல் எனது அக உருவினையும் உமது வெளிப்பாடெனும்  பகலூற்றின்  பிரகாசங்களினால்  ஒளிரச் செய்வீராக.

-Bahá'u'lláh
-----------------------

